×

வருமான வரித்துறைக்கு எதிராக சென்னையில் செல்வப்பெருந்தகை தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: வருமான வரித்துறைக்கு எதிராக சென்னையில் செல்வப்பெருந்தகை தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; பாராளுமன்ற பொதுத் தேர்தலை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டு வரும் இந்த வேளையில், கடந்த பிப்ரவரி மாதம் சட்டவிரோதமாக பா.ஜ.க. அரசு வருமான வரித்துறையின் மூலம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கியது. அதன் தொடர்ச்சியாக நேற்று வருமான வரித்துறை ரூபாய் 1823.08 கோடி வரி நிலுவை செலுத்த வேண்டுமென புதிதாக ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கிலிருந்து வலுக்கட்டாயமாக 135 கோடி ரூபாயை சட்டவிரோதமாக அபகரித்துள்ளது. மக்களவை தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியை இத்தகைய கீழ்த்தரமான செயலால் முடக்கி விடலாம் என்று பா.ஜ.க. தப்பு கணக்கு போட்டுள்ளது. இந்த ஜனநாயக விரோத, பாசிச செயலை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தலைமையில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், நாளை (31.3.2024) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள்.

The post வருமான வரித்துறைக்கு எதிராக சென்னையில் செல்வப்பெருந்தகை தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Wealth-led ,Chennai ,Congress ,Congress party ,Parliament ,J. K. ,Dinakaran ,
× RELATED பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும்...